Monday, 11 December 2017

எனக்குத் தெரிந்த பாரதி

பராசக்தியிடம் பேரம் பேசியவன். கண்ணனைத் தோழனாய் பாவித்தவன். சாதி வேற்றுமைகள் புரையோடிக் கிடந்த காலத்தில், காக்கைக்  குருவி எங்கள் சாதி என்று ஒற்றுமை பாராட்டியவன். மூடச் சம்பிரதாயங்களை உடைத்தெறிந்து  வாழ்ந்து காட்டிய முறுக்கு மீசைக்காரன். இந்தியா எப்போது விடுதலைப் பெறும் என்பதே கேள்வியாய் இருந்த காலத்தில் “வெள்ளிப் பனி மலையின் மீதுலவுவோம், அடி மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்” என்று மார்தட்டிய புரட்சியாளன். இந்தியா என்றால் பஞ்சம் என்று மேலை நாடுகள் முடிவு செய்த காலத்தே “வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செய்வோம்” எனச் சொன்ன தீர்க தரிசி. விடுதலைப் போர் திளைத்திருந்த காலத்தில் காணி நிலம் கேட்டு பராசக்தியையே குழப்பியவன், “ஆடுவோமே பள்ளு பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்”, என்று வெள்ளையனையும் சேர்த்தே குழப்பியவன். பாஞ்சாலியின் வாய்மொழியில் பெண்ணுரிமை பேசியவன். பாதகம் செய்வோர் முகத்துமிழ்ந்திட சிறு பிள்ளைக்குக் கற்றுத்தந்தவன்
  “ நரை கூடி கிழ பருவம் எய்தி, வீழ்வேனென்று நினைத்தாயோ” என்ற அவன் சவாலை, அவனுக்கு வரமாய் அளித்தாள் போலும் அவன் வணங்கிய பராசக்தி.அந்தச் சுப்பிரமணிய பாரதியின் புகழ் பரப்புவோம் , அவன் தமிழைப் போற்றுவோம். வாழ்க பாரதி, வளர்க தமிழ்.
                                   - hareesh aravindakshan