Saturday, 25 July 2020

காக்கைக் கூடு

எனக்கு ஒரு புங்கையும் வாகையும் கடந்த மூன்று வருடங்களாக நல்ல பரிச்சயம். இரண்டும் கைகோர்த்து என் வீட்டின் முன் அழகாக நிற்கும். இவை கீழிருந்து மேல் நோக்கி வளர்ந்ததை என் இரண்டாவது மாடி வீட்டின் பால்கனியிலிருந்து பார்த்து வந்ததாலோ என்னவோ என் பிள்ளைகளாகவே தெரிந்தன, தினமும் காலையில் எழுந்ததும் இவர்களைப் பார்த்து ஒரு புன்னகை செய்து, குறிப்பாக எதையும் சிந்திக்காமல், அதேவேளையில் பல நினைவுகளை அசைபோட்டு நகர்வது இப்போதெல்லாம் வாடிக்கையாகிவிட்டது.


    அப்படி அசைபோட்டுக் கொண்டிருந்த ஒரு காலை வேளை புங்கையின் கிளையிடையே பரபரப்பாய் இரண்டு காகங்கள். அவற்றைக் கூர்ந்து கவனிக்கும் அளவு என்னிடம் நேரம் இருந்தது. தங்கள் அலகுகளில் குச்சிகளுடன் கூடமைக்க பொருத்தமான கிளையை அவை ஆராய்ந்து கொண்டிருந்தன.அவற்றின் காகப் பார்வையில் அளந்து நேர்த்தியான குச்சிகளை உடைத்தெடுத்த அழகும் என்னைக் கவர்ந்தது. அடுத்த இரண்டு நாட்கள் முழு நேரப் பணியாக கூடு அமைக்கும் வேலை தொடர்ந்தது. அந்த கட்டுமானத்தின் அவசியமும், அதன் அவசரமும் அவை நேர்த்தியாய் அமைத்து முடித்த கூட்டிலிருந்து தெரிந்தது. முட்டைகளின் எண்ணிக்கை தெரியாது ஆனால் சில முட்டைகளை ஜோடிகள் இரண்டும் மாறி மாறி அடைகாத்து வந்தன. இதைத் தினமும் காணும் என்னுள் சில கேள்விகள் எழுகின்றன.


     இவ்வளவு சிறப்பாகவும் பாதுகாப்பாகவும் கட்டப்படும் கூட்டில் ஏன் அவை நிரந்தரமாகத் தங்குவதில்லை. காகங்களின் சித்தாந்தத்தில், கூடு, வாழ்க்கைச் சக்கரத்தில் ஒரு அங்கம். கூடே வாழ்க்கை இல்லை.பெரும் உழைப்பால் பல சவால்களைக் கடந்து அமைத்த கூட்டை அதன் பயன் முடிந்ததும் அப்படியே விட்டுவிட்டு வானில் சிறகடிக்க எவ்வளவு பெரிய மனம் வேண்டும். இதைத் தான் பற்றற்று இருப்பது என்றார்களோ? நான் ஏன் ஒரு கூட்டைச் சுற்றி வாழவேண்டும், இந்த வானமே என் எல்லை என்று சொல்லாமல் சொல்லும் காக்கையின் முன் நான் எவ்வளவு குறுகிவிடுகிறேன்.


     நோன்பு நோற்று காத்த முட்டைகளிலிருந்து வந்த குஞ்சுகளைப் பேணி, சில சமயங்களில் குயிலின் குஞ்சையும் தன்னுடையதாகவே வளர்க்கும் காகம், பிஞ்சு சிறகுகள் பறக்க ஏற்றனவாய் ஆனதும் அவற்றின் வாழ்வை அமைக்கும் பொறுப்பை அவற்றிடமே விட்டுவிடுகின்றது. ஊட்டப்படுவது அல்ல வாழ்வியல், அது அனுபவத்தில் தெளிவது என்றல்லவோ காகங்கள் எடுத்துரைக்கின்றன.


     உணவில் விருப்பு வெறுப்பு இல்லாமல் கிடைத்ததை உண்டு, கிடைத்த மரக்கிளையில் தங்கி, மழையையும் வெயிலையும் ஒரு போலக் கொண்டு, இப்படி எதிலும் ஒட்டாத வாழ்வும் ஒரு வாழ்வா என்று தோன்றலாம். ஆனால் காகங்கள் தங்கள் இணையைச் சாகும் வரை பிரிவதில்லை என்பது பலருக்குப் புது செய்தியாக இருக்கும். தாம்பத்திய வாழ்வில் விதிவிலக்குகள் காகங்களிலும் உண்டு. ஆனால் அந்த கணக்கில் நம்மை விட அவை குறைவு.


   சரி ஜோடியாய் சுற்றித் திரிந்தால் போதுமா சமுதாயக்கட்டமைப்பொன்று வேண்டாமா? "அதில் எங்களை மிஞ்ச யார் உள்ளார் " என்பது போல் கரைந்தது ஒரு காகம். என்ன தான் தனித்திருப்பதாய் தெரிந்தாலும், ஒரு அவலக்குரல் எழுப்பினால் நூறு குரல்கள் சேர்ந்தொலிக்கும். பெருங் கூட்டமே ஒன்றிணையும், நாமும் கூடுவோம் வேடிக்கை பார்க்க ஆனால் அவை கூடுவது தன் இனத்தை மீட்க.


    இப்படி அமாவாசை தர்ப்பணங்களுக்கு மட்டுமே கவனிக்கப்படும் காகம் எவ்வளவோ செய்திகளைச் சொல்லாமல் சொல்லிச் செல்கிறது. இவற்றைக் காக்கையின் இயல்புகள் என ஒதுக்கி விடக் கூடாது. இவை நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் இயற்கையின் இயல்பு, வாழ்வை இயற்கை அமைத்த வழியில் நடத்தும் ஒவ்வொரு உயிரின் இயல்பு. நாம் இயற்கையிலிருந்து விலகிப்போனதால் வித்தியாசமாகவும் ஆச்சரியமாகவும் தெரிகிறது. காக்கையாய்ப் பரிமாணிப்போம். இயற்கையில் இணைவோம்.

                   -A thought the other way round.