எப்பொழுதும் போல் சனிக்கிழமைகளில் அலுவலகம் செல்லும் அவலம் எப்போது மாறும் என்ற மனநிலையோடு, அன்றைய பயணம் தொடங்கியது. சுகூட்டர் சிடாண்டில் வண்டியை நிறுத்தி விட்டு, இரயில் தண்டவாளத்தைக் கடப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என்ற அறிவிப்பை நன்கு புரியும் மூன்று மொழிகளில் பலமுறை கேட்டும், எனக்கில்லை என்ற ஏளனத்தோடும் சோம்பலோடும் கடந்து நடைமேடை அடைந்தேன்.
அப்போது தாம்பரம் நோக்கிச் செல்லும் ஒரு மின்சார இரயில் மெதுவாக நகரத் துவங்கியது. அந்த வண்டியிலிருந்து ஒரு நடுத்தர வயது தாயும், 12 அல்லது 13 வயது மதிக்கத்தக்கச் சிறுமியும், அவளை விட 2 அல்லது 3 வயது இளைய சிறுவன் ஒருவனும் ,ஒரு பெட்டி இரண்டு மூன்று பைகளுடன் இறங்கியிருந்தார்கள். வண்டி நகர்ந்து வேகம் பிடிக்கத் துவங்கியவுடன் அந்தச் சிறுமி குதிக்கத் துவங்கினாள். இடைவேளை விட்டு விட்டு மகிழ்ச்சியாகக் குதித்துக் கொண்டிருந்தாள். இதைக் கண்டதும் எனக்கு விளங்கவில்லை, சிறிது அருகில் சென்றதும் தான் புரிந்தது. வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் போகும் இரயிலின் நிழல் நடைமேடை மீது விழும். இரயில் நகரும் போது இரு பெட்டிகளின் இடையில் இருக்கும் பகுதிகளில் சூரியஒளி நடை மேடையில் படும். அவள் அந்த ஒளி தன் காலருகே வரும்போதெல்லாம் அதை மிதிக்காத வண்ணம் குதித்துக் கொண்டிருந்தாள், வண்டி வேகம் பிடிக்கப் பிடிக்க அவள் குதித்து மகிழ்ந்ததும் வேகம் பிடித்தது.
ஒழுங்கு படுத்தப் படாத ஆடை, சீவப் படாத தலை முடி, கையிலிருந்த பெட்டி பைகள் இவற்றைப் பார்த்தாலே சீராக உறக்கம் இல்லாத நெடிய இரவு பயணம் செய்து வந்திருக்கிறார்கள் என்பது விளங்கும். மேலும் 12 பெட்டிகள் கொண்ட அந்த மின் தொடர் வண்டியில் அவர்கள் வந்தது இரண்டாவது பெட்டி. அதிலிருந்து இறங்கி, நகரும்போதே வேகம் பிடித்து விடும் இரயிலின் நிழலோடு ஒரு விளையாட்டையும் கண்டுபிடித்து அச்சிறுமி மகிழ்ச்சியாக அதை விளையாடியும் முடித்தாள்.இதைக் கண்டதும் நாம் கடந்து போகும் சிறு சிறு நிகழ்வுகளில் இருக்கும் இன்பங்களைக் காண மறுத்து வாழ்வைக் கடிந்து கொள்வதையே வாழ்க்கையாக்கிக் கொண்டுவிட்டோமோ?
"எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா"
என்று ஒருவன் இதைத் தான் சுட்டிக்காட்டிச் சென்றானோ... என்பது போன்ற எண்ணங்கள் மனத்தில் எழுந்தன.
நாம் ஏன் அந்த சிறுமியின் கண்ணோட்டத்தில் நம் சுற்றத்தைப் பார்ப்பதில்லை என்று ஏங்கிக்கொண்டே அவளைக் கடந்தேன், அவள் அந்த விளையாட்டின் மகிழ்ச்சியில் இன்னமும் திளைத்துக் கொண்டிருந்தாள்.
No comments:
Post a Comment